டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம்: மக்கள் நிம்மதி பெருமூச்சு
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று காலை டெல்லி சாலைகளில் வாகனங்களின் ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. சமீபத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூட இதுபற்றி கூறியிருந்தார். வாகன புகையால்தான் 40 சதவீத மாசு ஏற்படுவதாக கூறினார். அதை நேற்றைய காட்சிகள் மெய்ப்பித்தன. கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று காலை டெல்லி சாலைகளில் வாகனங்களின் ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது. பனிப்பொழிவும் பெரிதாக இல்லை. இதனால் வானம் தெளிவாக தெரிந்தது. காலையிலேயே சூரியனை பார்க்க முடிந்தது. மாசு பெரிதாக தென்படவில்லை.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளில் காற்றின் தரம் சராசரியாக 220 ஆக பதிவானது. டெல்லியில் உள்ள 39 காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களில் 10 நிலையங்களில் காற்றின் தரம் மிதமாக இருந்தது. மீதமுள்ளவற்றில் 300-க்கு கீழ் இருந்தது. இதனால் நேற்றையப் பொழுது சுவாசிப்பதற்கு அதிக சிரமம் இல்லாமல் இருந்தது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு டெல்லி வாசிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். காற்று மாசுவை மேலும் குறைத்து சுத்தமான காற்றை சுவாசிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.