கோபி நகராட்சி அலுவலகத்தில் உடைந்த ஹெல்மெட்- கழிவறை கோப்பையில் பூச்செடிகள் வளர்ப்பு; ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
கோபியில் உடைந்த ஹெல்மெட்- கழிவறை கோப்பையில் பூச்செடிகள் வளர்க்கப்படுகிறது.;
கடத்தூர்
கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கரட்டூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைகளை சேகரிக்கும் போது பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் பல பொருட்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் சேகரம் செய்யப்பட்ட குப்பைகளில் பொதுமக்கள் ஹெல்மெட், கழிவறை கோப்பை, டயர், மற்றும் உபயோகமில்லாத பொருட்களை வீசி சென்றுவிடுகின்றனர்.
அவைகளை சுகாதார பணியாளர்கள் சேகரித்து நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு வைத்து பூச்செடிகள் வளர்த்து வருகின்றனர். உடைந்த ஹெல்மெட்டுகளில் பல்வேறு வர்ணங்கள் பூசி அதை கயிற்றால் கட்டி தொங்கவிட்டு அதில் மண் போட்டு பூச்செடிகளை வளர்த்து வருகின்றனர். மேலும் கழிவறை கோப்பைகளிலும் வர்ணங்கள் பூசி அதில் மண் போட்டு பூச்செடிகளை வளர்க்கின்றனர். இதை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என ஆவலுடன் பார்த்து செல்கிறார்கள். பொதுமக்களும் இது போன்ற பொருட்களை குப்பைகளில் வீசாமல் இதே போல பயன்படுத்தலாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.