கணவரை கொன்று கிணற்றில் பிணம் வீச்சு; கைதான இளம்பெண் திருச்சி சிறையில் அடைப்பு

கணவரை கொன்று கிணற்றில் பிணம் வீசிய வழக்கில் கைதான பெண் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-10-04 19:53 GMT
ஆதனக்கோட்டை, 
கூலிதொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 30), கூலிதொழிலாளி. இவருக்கும் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கான்கொல்லைபட்டியை சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசிய நந்தினியை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருடன் காதல்
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் நந்தினியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். நந்தினி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் நந்தினி வேலை பார்த்தபோது வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இந்தநிலையில் பாண்டித்துரைக்கும், நந்தினிக்கும் திருமணம் ஏற்பட்டது.
தகராறு
இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் 20-ந் தேதி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நந்தினி தனது கணவரின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பாண்டித்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க வீட்டருகே இருந்த உறைக்கிணற்றில் பாண்டித்துரையின் கால் மற்றும் கைகளை கட்டி போட்டு கிணற்றில் தள்ளியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து, கணவரை கொலை செய்த நந்தினி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். 
இந்த கொலை சம்பவம் குறித்து பாண்டித்துரை உறவினர்கள் கூறுகையில், இந்த கொலை வழக்கில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாண்டிதுரையை கொலை செய்த நந்தினியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்