காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற 27 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.

Update: 2021-10-05 11:24 GMT
அதன்பேரில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 198 மதுபான பாட்டில்கள், ரூ.1,500 மதிப்புள்ள 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம், மற்றும் அரசு மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் மீனாட்சிபுரம் அரசு டாஸ்மாக் கடை அருகே ஒரு பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, அங்கு பெட்டி கடையில் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த பரமக்குடியை சேர்ந்த ஹரிகரன் (வயது 21), என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 17 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்