டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்;

Update:2021-10-05 20:06 IST
கோவை

காஞ்சீபுரத்தில் ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுபிரியர்கள் அவதிப்பட்டனர்.

கொலை

காஞ்சீபுரம் வடக்கு மண்டலம் ஓரகடம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் துளசிதாஸ் மற்றும் ராமு ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டப் பட்டனர். இதில் துளசிதாஸ் பரிதாபமாக இறந்தார். 

ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம், புலியகுளம், உக்கடம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் அடைத்தனர்.

இதனால் காலையில் மதுபாட்டில்கள் வாங்க வந்த மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே டாஸ்மாக் ஊழியர்கள் பீள மேட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலக வளாகத்தில் திரண்ட னர். 

பின்னர் அவர்கள் டாஸ்மாக் ஊழியரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

இதற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி ஜான், எல்.பி.எப். நிர்வாகி தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

அவர்கள், கொலை செய்யப்பட்ட துளசிதாஸ் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்த ராமுவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சென்னையில் டாஸ்மாக் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

 இதனால் கோவையில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.


ஆனால் காலை முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மதுபிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். மாலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட உடன் மதுபிரியர்கள் உற்சாகத்துடன் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்