மழை காரணமாக தக்காளி செடிகள் கருகின

மழை காரணமாக தக்காளி செடிகள் கருகின;

Update:2021-10-05 23:03 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் பெய்த மழை காரணமாக தக்காளி செடிகள் கருகின. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்தது.

தக்காளி சாகுபடி

கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள கிணத்துக்கடவு, சொக்கனூர், கோதவாடி, நம்பர் 10 முத்தூர், முத்துக்கவுண்டன்புதூர், சிங்காரம் பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தக்காளி அறுவடை தொடங்கும். தற்போது அறுவடைக்கு தயாரான தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து கிணத்துக்கடவு சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

செடிகள் கருகின 

இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த தக்காளி செடிகள் கருகின. 

இதனால் அந்த செடிகளில் காய்த்து இருந்த தக்காளி அனைத்தும் கீழே விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மேலும் ஏராளமான தக்காளி செடிகள் பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் செய்வது அறியாமல் திகைத்து வருகிறார்கள். 

விலை உயர்வு 

இதற்கிடையே கிணத்துக்கடவு சந்தையில்  தக்காளி ஏலம் நடந்தது. வழக்கமாக 30 டன்னுக்கும் அதிகமாக தக்காளி கொண்டு வரப்படும். ஆனால்  ஏலத்துக்கு வெறும் 6 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 

இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோன்று ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.37-க்கு ஏலம்போனது. இதன் காரணமாக சில்லரை விற்பனையாக தக்காளி கிலோ ரூ.45-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. 

உரிய இழப்பீடு 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பது மகிழ்ச்சி யாக இருந்தாலும், செடிகள் கருகி இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, கிணத்துக்கடவு சந்தையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வரத்து குறைவாக இருப்பதால் அதன் தேவை அதிகரித்து இருக்கிறது. இதுதான்  அதன் விலை உயர்வுக்கு காரணம். தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்