போலீஸ்காரரின் புல்லாங்குழல் இசையை கேட்க டவுசருடன் அமர்ந்த அதிகாரியிடம் விளக்கம் -மதுரை போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரின் புல்லாங்குழல் இசையை கேட்க டவுசருடன் அமர்ந்து ரசித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.;

Update:2021-10-06 02:27 IST
மதுரை, 

மதுரை ஆயுதப்படை போலீஸ்காரரின் புல்லாங்குழல் இசையை கேட்க டவுசருடன் அமர்ந்து ரசித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரி

மதுரை மாநகர் ஆயுதப்படையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் என சுமார் 1,200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அங்கு போலீஸ் துணை கமிஷனராக சோமசுந்தரம் பணியாற்றி வருகிறார். 
இவர் டிக்-டாக் செய்தது, போலீசாரை அவரது சொந்த வேலைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் போலீஸ் துணை கமிஷனர் சோமசுந்தரம், டவுசர் மட்டும் அணிந்து கொண்டு எண்ணெய் மசாஜ் செய்த படியும், அருகே மது பாட்டில்கள் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மற்றொரு சர்ச்சை

மேலும் அந்த வீடியோவில், போலீஸ்காரர் ஒருவரை புல்லாங்குழல் வாசிக்க வைத்து அதனை துணை போலீஸ் கமிஷனர் சோமசுந்தரம் டவுசருடன் அமர்ந்து ரசிப்பதுமான காட்சிகளும் உள்ளன. இது மற்றொரு சர்ச்சையாகவும் மாறி உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா. துணை கமிஷனர் சோமசுந்தரத்திடம் நேற்று காலை விசாரணை நடத்தினார்.  பின்னர் போலீஸ் கமிஷனர் கூறும்போது, “துணை கமிஷனர் சோமசுந்தரத்திடம் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்