மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன

மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன;

Update:2021-10-06 21:24 IST
வால்பாறை

வால்பாறை பகுதியில் பெய்த மழை காரணமாக மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரவலாக மழை

வால்பாறை பகுதியில் கடந்த மே மாதம் 23-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையும், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தமிழகம் மற்றும் கேரள கடலோர மாவட்டங்களில் தோன்றிய பல்வேறு புயல்கள் காரணமாகவும் வால்பாறை பகுதி முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


இந்த மழையால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணை ஜூலை 23-ந்தேதி தனது முழுக் கொள்ளளவான 160 அடியை எட்டியது. சோலையாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலமாக பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை ஆகிய அணைகள் நிரம்பி விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

வேரோடு சாய்ந்த மரம்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக நல்ல வெயில் இருந்த நிலையிலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது. 

இதன்காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக வால்பாறையிலிருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் காபி தோட்டத்திலிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. 

2 மணி நேரம் பாதிப்பு

இதனால் அந்தவழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோட்டில் சாய்ந்த கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். 

இதையடுத்து அங்கிருந்து வாகனங்கள் சென்றன. மரம் முறிந்து ரோட்டில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்