வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2021-10-07 21:18 GMT
ஈரோடு
வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
வீட்டு மனைகள் விற்பனை
சத்தியமங்கலம் ஆலத்துக்கோம்பை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த சீனிவாசன், சரவணன், நீலகிரி மாவட்டம் கீழ் குந்தா பகுதியை சேர்ந்த நிர்மலா, ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த நாகராஜன், கொத்துக்காரன் வீதியை சேர்ந்த சேகர் ஆகியோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளியில் வீட்டு மனைகளை விற்பனை செய்வதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்திருந்தது. இதைப்பார்த்து நாங்கள் 6 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பனையம்பள்ளியில் உள்ள இடத்தை பார்த்தோம். பின்னர், நாங்கள் 6 பேரும் எங்களது வசதிக்கு தகுந்தாற்போல 650 சதுர அடி முதல் 7 சென்ட் வரை தனித்தனியாக இடத்தை தேர்வு செய்து, அதற்காக 3-ல் ஒரு பங்கு தொகையாக ரூ.27 லட்சம் கொடுத்து இடத்தினை முன்பதிவு செய்தோம்.
ரூ.27 லட்சம் மோசடி
நாங்கள் கொடுத்த முன்பணத்திற்கு அந்த நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி தான் கையெழுத்திட்டு ரசீது கொடுத்தார். கிரையம் செய்யும் போது இடத்தின் உரிமையாளர் கையெழுத்து போட்டு தருவார் என்றும் அவர் கூறினாா். கொரோனா ஊரடங்கு காரணமாக கிரையம் செய்வது தள்ளிப்போனது.
இதனால் நாங்கள் எங்களது நிலத்தை கிரையம் செய்து தரும்படியும், இல்லாவிட்டால் நாங்கள் செலுத்திய ரூ.27 லட்சத்தை திருப்பி வழங்கும்படியும் கேட்டோம். ஆனால், தற்போது வரை பணத்தை தராமல் மோசடி செய்து வருகின்றனர். எனவே, எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்