கோவிலில் வேல் கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்- கடம்பூரில் பரபரப்பு

வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி கடம்பூரில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-07 21:18 GMT
டி.என்.பாளையம்
வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி கடம்பூரில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி கம்பத் ராயன் கிரி மலையில் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கடம்பூரை அடுத்த பசுவனாபுரத்தை சேர்ந்த சிலர் அந்த கோவிலுக்கு சென்று மது போதையில் கோவிலின் முன்பு உள்ள வேல் கம்புகளை பிடுங்கியுள்ளனர்.
இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை அறிந்த கடம்பூர் பகுதி பொதுமக்கள், இந்து அமைப்பினர், 5-ந் தேதி காலை கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் கடம்பூர் - சத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மீண்டும் போராட்டம்
இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் வேல் கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலில் ஈடுபடுவதற்காக மதியம் 12 மணி அளவில் ஏராளமானோர் ஊர்வலமாக திரண்டு கடம்பூர் பஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டுக்கு வந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடம்பூர், சத்தியமங்கலம், கோபி போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்வதற்காக பஸ்சில் ஏற்ற முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சிலர் பஸ் டயரின் காற்றை         பிடுங்கி விட்டனர்.
கடைகள் அடைப்பு
பின்னர் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து சென்று பெட்ரோல் பங்க் அருகே உள்ள ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தையொட்டி கடம்பூரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு ஜானகிராம் உள்ளிட்ட போலீசார் மற்றும் சத்தியமங்கலம் வருவாய்த்துறையினர், அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் அவர்களிடம், ‘கோவிலில் வேல் கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்கிறோம்’ என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 3 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கடம்பூர் - சத்தி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சாலை மறியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்