வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.;

Update:2021-10-08 20:26 IST
உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019-ம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவி இடங்களில் இறப்பு, பதவி விலகல் காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரை ஏற்பட்ட 27 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தற்செயல் தேர்தல்கள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், தூக்கநாயக்கன் பாளையம், பவானிசாகர் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் -5-க்கான தேர்தலும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு கவுன்சிலர் 4-க்கான தேர்தலும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் 10-க்கான தேர்தலும் மற்றும் காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ள 4 சிற்றூராட்சி தலைவர்களுக்கும், 20 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் தற்செயல் தேர்தல்கள் நடக்கிறது.
150 வாக்குச்சாவடிகள்
ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல்களுக்காக மொத்தம் 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மொடக்குறிச்சி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் தேர்வு செய்யப்பட்ட பதவியிடங்கள் போக மீதம் 144 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள், வாக்களிப்பு மறைவு அட்டைகள், உலோக முத்திரை, பாலித்தீன் உறை, கித்தான் உறை, உலோக சட்டம், அம்புக்குறி முத்திரை, வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகளில் பயன்படுத்தக்கூடிய தாள் முத்திரைகள், ரகசிய முத்திரைகள், எழுது பொருட்கள், படிவங்கள் மற்றும் உறைகள், அழியாத மை குப்பிகள், கொரோனா பாதுகாப்பு பொருட்களான தெர்மோ மீட்டர் கருவி, கிருமி நாசினி, முக கவசங்கள், கையுறை உள்பட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டஅரங்குகளில் அமைக்கப்பட்டு உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஆய்வின்போது கலெக்டருடன், உதவி இயக்குனர் (தணிக்கை) தனசேகரன், ஈரோடு ஊராட்சி ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுசீலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்