5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை;

Update:2021-10-08 21:56 IST
கோவை

ஈமு கோழி மோசடி வழக்கில் திருப்பூரை சேர்ந்த 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஈமு கோழி பண்ணை

திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ் ணன் (வயது 53), காவலன் காப்பி தோட்டம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (51), அங்கேரிபாளையத்தை சேர்ந்த பெருமாள் ராஜ் (54), அவினாசி சென்னிமலை கவுண்டன்புதூர் அசோக்குமார் (33), 

ஆர்.கே.கவுண்டன்புதூரை சேர்ந்த சரவணன் (47) ஆகிய 5 பேரும் சேர்ந்து காவலன் காப்பி தோட்டம் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு பண்ணை தொடங்கினர்.
இவர்கள் கவர்ச்சிகரமான 2 திட்டங்களை அறிவித்தனர். 

இதில், முதல் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்தால் 8 முதல் 10 வரையிலான ஈமு கோழிக்குஞ்சுகள் அல்லது 500 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். இதற்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும். 

மேலும் ஆண்டுக்கு போனசாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். 2-வது திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய் தால் 8 ஈமு கோழிக்குஞ்சுகள் அல்லது 500 நாட்டு கோழி குஞ்சுகள் அவர்களது பண்ணையில் வளர்க்கப்படும். 

மேலும் மாதந்தோறும் ரூ.8,500 முதல் ரூ.11 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அறிவித்தனர்

5 பேர் கைது

மேலும் 2 ஆண்டுகள் முடிவில் அந்த 2 திட்டங்களிலும் முதலீடு செய்பவர்களின் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும். இதுதவிர இலவச தங்கக்காசு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தனர். 

இதை நம்பி பலர் இவர்களிடம் முதலீடு செய்தனர். இவர்கள் அறிவித்தபடி பணத்தை பொதுமக்களுக்கு வழங்க முடியவில்லை. இதையடுத்து பண்ணையை மூடி விட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்தனர். 

5 ஆண்டு சிறை

போலீஸ் விசாரணையில் அவர்கள் 5 பேரும் 22 பேரிடம் ரூ.53 லட்சத்து 64 ஆயிரத்து 800 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த முத்துகிருஷ்ணன், கந்தசாமி, பெருமாள் ராஜ், அசோக்குமார், சரவணன் ஆகிய 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

அபராதம்

மேலும் அவர்களுக்கு தலா ரூ.11 லட்சம் வீதம் ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தார். இதில் முத்துகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார். அபராத தொகை ரூ.54 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்