ஆப்பிள் தக்காளி விலையும் கிடுகிடு உயர்வு

ஆப்பிள் தக்காளி விலையும் கிடுகிடு உயர்வு;

Update:2021-10-10 20:20 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தக்காளி செடிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவு குறைந்தது. ஆனால் தக்காளிகளை கொள்முதல் செய்ய தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தனர்.

இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.35-ஆக அதிகரித்தது. தற்போது ஆப்பிள் தக்காளி விலையும்  அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ஆப்பிள் தக்காளி 25 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. தற்போது ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று கிணத்துக் கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ஆப்பிள் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. கடைகளில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 45 ரூபாய் வரையும், ஆப்பிள் தக்காளி ரூ.55 ரூபாய் வரையும் சில்லரை விலையில் விற்கப்படுகிறது. நாடு மற்றும் ஆப்பிள் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்