புகார் பெட்டி

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

Update: 2021-10-10 20:00 GMT
குடிநீர் பிரச்சினை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியபுரம், வெள்ளையாபுரம். 

 சுகாதார சீர்கேடு  
மதுரை மாவட்டம் புதூர் பகுதி கணேசபுரம் முதல் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-விஜய்கிருஷ்ணன், புதூர். 

குடிநீர் தொட்டி 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வளநாடு ஊராட்சி, செங்கற்படை கிராமத்தில் உள்ள மக்கள், பயன்படுத்தும் குடிநீர் தொட்டி அமைத்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தொட்டி பழுதடைந்து உள்ளது. இதனால் தொட்டியில் தேங்கும் தண்ணீர் அசுத்தமடைந்து, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில் முருகன், செங்கற்படை.

ஆபத்தான பள்ளம் 
மதுரை புதுஜெயில் ரோட்டில் குறுகலான பாதையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் திடீரென ஆங்காங்கே உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக சாலையில் உள்ள பள்ளத்தில் மரக்கன்று நட்டு வைத்துள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும். 
-அருள்ராஜ், மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 
-ரமேஷ், இளையான்குடி. 

பாலத்தில் பள்ளம் 
மதுரை தெப்பக்குளம்-வண்டியூர் இடையே வைகை ஆற்றின் குறுக்கில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நீண்ட பள்ளம் காணப்படுகிறது. அதில் கம்பிகள் நீட்டி கொண்டிருக்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்கள் இந்த பள்ளத்தில் ெசல்லும்போது, பழுதாகின்றன. இதுகுறித்து புகார் செய்தபின், தற்காலிகமாக சரிசெய்கிறார்கள். மீண்டும் அங்கு பள்ளம் ஏற்படுகிறது. இந்த பள்ளங்களை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும். 
-சிவா, மதுரை.
கழிவுநீர் கால்வாய் வேண்டும் 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சின்னகீரமங்கலம் கிராமத்தில் இருந்து திருவாடானை செல்லும் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் குடியிருப்பில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், சின்னகீரமங்கலம்.

சாலையை சீரமைக்க கோரிக்கை
மதுரை பைக்காரா பஸ் நிறுத்தம் முதல் அழகப்பன் நகர் பஸ் நிறுத்தம் வரை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன்பு குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
-கண்ணன், திருநகர்.

மேலும் செய்திகள்