ஒரே நாளில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-10 20:43 GMT
மதுரை, 

மதுரையில் ஒரே நாளில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பரிசுகள்
தமிழகம் முழுவதும் கடந்த 5 வாரங்களாக தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்திலும் நேற்று 5-வது வாரமாக ஆயிரத்து 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
அதன்படி நேற்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சியும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முதல் தவணையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், செல்போன், குக்கர், வேட்டி- சேலை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக சிறப்பு முகாம்களில் பெரிய அளவில் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தடுப்பூசி போட்டவர்கள் தங்களது பெயர், முகவரிகளையும் எழுதி பதிவு செய்தனர். 
87 ஆயிரம் பேருக்கு
நேற்று 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம், தடுப்பூசி முகாம் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக அதிக அளவில் நபர்கள் தடுப்பூசிகள் செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அதன் மூலம் நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 711 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்