பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போட ஆற்றை கடந்து சென்ற டாக்டர்கள்

பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக டாக்டர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.

Update: 2021-10-10 21:41 GMT
ஈரோடு
பர்கூர் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக டாக்டர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 5-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நடைபெற்றது.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் குட்டையூர், வேளாம்பட்டி மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றை கடந்து செல்ல வேண்டும். மழை பெய்யும் போது பாலாற்றில் தண்ணீர் ஓடும். தற்போது பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் செல்கிறது.
ஆற்றை கடந்து சென்றனர்
இந்த நிலையில் நேற்று குட்டையூர், வேளாம்பட்டியில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக அங்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இங்கு தடுப்பூசி போடுவதற்காக டாக்டர் சுரேஷ் தலைமையிலான டாக்டர்கள் பாலாற்றின் கரை வரை காரில் சென்றனர்.
பின்னர் மருத்துவ உபகரணங்களை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி நடந்து குட்டையூர் கிராமத்துக்கு சென்றனர். அங்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்ததும் மீண்டும் ஆற்றை கடந்து மறுகரைக்கு சென்றனர். பர்கூர் மலைப்பகுதியில் மொத்தம் 16 மையங்களில் நடந்த முகாமில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் 80 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 14 ஆயிரம் பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டன. அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகன வள்ளி தலைமையில் டாக்டர்கள் சக்தி கிருஷ்ணன், சதீஷ் குமார், கார்த்தீபன், பார்த்திபன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர்.
கோபி
மேலும் கோபி நகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் முகாம் வேங்கை அம்மையார் உயர்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வைரவிழா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடத்தப்பட்டது. முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்