பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் உள்ள பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2021-10-11 18:24 IST
ஆபத்தான நிலையில்...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மற்றும் கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வருகிறது. இந்தநிலையில் படப்பை அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் உள்ள மின்கம்பம் சிமெண்டு கலவை பெயர்ந்து எலும்புக்கூடு போல் கம்பிகள் தெரிந்த ஆபத்தான நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. இதேபோல் இந்த சாலையோரம் ஒரு சில மின் கம்பங்களில் உள்ள சிமெண்டு கலவை பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த மின் கம்பங்கள் பலத்த காற்று வீசும் போது எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து சாலையில் பெரும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே முக்கிய சாலையோரம் அபாயகரமான நிலையில் உள்ள, இந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்