டாக்டர் உள்பட 3 பேர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

டாக்டர் உள்பட 3 பேர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை

Update: 2021-10-12 17:56 GMT
கோவை

மாவோயிஸ்டு ஆதரவாளர்களான டாக்டர் தினேஷ் உள்பட 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர். இதனால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவோயிஸ்டு ஆதரவாளர்கள்

கேரள மாநிலம் அட்டப்பாடி, வயநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அவ்வப்போது அந்த பகுதிகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் மத்திய பகுதியான வயநாடு பகுதியை, அவர்கள் தங்களது செயல்பாட்டுத்தளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக கேரள அரசின் தண்டர்போல்ட் என்ற சிறப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் மாவோயிஸ்டுகள் நடமாட்ட பகுதிகள் தமிழக எல்லை பகுதியையொட்டி இருப்பதால் தமிழக போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கைதான மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், அவருடைய மனைவி சைனா உள்ளிட்டவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு மாவோயிஸ்டு இயக்கத்தினர் கேரள மாநிலம் நீலாம்பூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது, தனி கொடியுடன் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 


இது தொடர்பாக 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் நபர்களை என்.ஐ.ஏ. போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று என்.ஐ.ஏ. போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


கோவை மாவட்டத்தில் சோதனை
இந்தநிலையில் தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டு அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
அதன்படி கோவை மாவட்டத்திலும் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-

பல் டாக்டர்

புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் (வயது36) பல் டாக்டரான இவர், இடையர்பாளையத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி கேரள மாநில தண்டர்போல்ட் போலீசார் தினேசை கைது செய்தனர். அவரது வீட்டில் மாவோயிஸ்டு இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள். தற்போது டாக்டர் தினேஷ் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்தநிலையில் டாக்டர் தினேஷ் வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கு 8 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தினார்கள்.
இதேபோல் கோவை சுங்கம் பகுதியில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர் டேனிசின் வீட்டுக்கும் 8 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி புது காலனி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவரது பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.


மடிக்கணினி, செல்போன்கள்


சந்தோஷ், கடந்த 2014-ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தநிலையில், காணாமல் போன சந்தோஷ் கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டு இயக்கத்துடன் சேர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் மீது வயநாடு போலீசில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
3 பேரின் வீடுகளிலும் நடைபெற்ற சோதனையில் மடிக்கணினி, செல்போன்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய வீடுகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த திடீர் சோதனை கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 மாநிலங்களில் சோதனை

தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ. போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் அம்பத்தூர், வில்லிவாக்கம் மற்றும் செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் சோதனை நடந்ததாக தகவல் வெளியானது. இதுபோல கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சேலம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 இடங்கள், கேரளாவில் 3 இடங்களிலும் சோதனை வேட்டை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சோதனை பற்றி என்.ஐ.ஏ. தரப்பில் இதுவரை எந்த விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் சோதனை நடப்பதை மட்டும் உறுதிபடுத்தி உள்ளனர்.


இரு மாநில போலீசார்


நீலகிரி மாவட்டம் கூடலூர், கேரள மாநிலம் வயநாடு ஆகிய எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதால் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை போலீசார் மற்றும் கேரள மாநில போலீசார் ஆகியோர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்களிடம் மாவோயிஸ்டு நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்