அனைத்து நாட்களும் தரிசனத்துக்கு அனுமதி பழனிக்கு வந்த முருக பக்தர்கள் மகிழ்ச்சி

கோவிலில் அனைத்து நாட்களும் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பழனி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2021-10-15 20:11 IST

பழனி:
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பக்தர்கள் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். மற்ற நாட்களில் நுழைவு பகுதியில் நின்று தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அனைத்து நாட்களும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பக்தர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நேற்று முதல் அனைத்து நாட்களும் கோவில் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
குமார் (பழனி) : 
பழனிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் தான் வெளியூர் பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள். ஆனால் வார இறுதி நாட்கள் தரிசன தடை காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது அனைத்து நாட்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளதால் உள்ளுர், வெளியூர் என அனைத்து பக்தர்களும் வழக்கம்போல கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பானுமதி (பழனி) : 
கொரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட இந்த தடையால் கடந்த சில நாட்களாக வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தோம். அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இனி எப்போது வேண்டுமானாலும் குடும்பத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். 
அருண் (வியாபாரி, அடிவாரம்) : 
கடை திறந்திருக்கும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஏனெனில் பழனியை பொறுத்தவரை வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை நம்பியே வியாபாரம் நடக்கும். விரைவில் சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் பழனிக்கு அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். ஆகவே இந்த அறிவிப்பு வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்