நண்பரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகிறார்கள்.;

Update:2021-10-16 03:14 IST
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நண்பர்கள்
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ராமனாதிச்சன்புதூரை சேர்ந்தவர் ரோச் அஜய் ஜான்சன் (வயது 32). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஷாலினி கர்ப்பிணியாக உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த ரோச் அஜய் ஜான்சன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன்பிறகு அவர் வெளிநாடு செல்லாமல், இங்கேயே தொழிலாளியாக வேலை பார்த்தார்.ரோச் அஜய் ஜான்சனுக்கு, அதே பகுதியை ேசர்ந்த லியோன் பிரபாகரன் (29), குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (30) ஆகிய 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் பிரபாகரன், டெம்போ டிரைவர். 
கள்ளக்காதல்
இதில் பிரபாகரனுக்கு அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுபற்றி அடிக்கடி தனது நண்பர்களான ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரன் ஆகியோரிடம் கூறி வந்துள்ளார்.
நண்பரின் கள்ளக்காதலி மீது ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரனுக்கு ஆசை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் கள்ளக்காதலியை அவர்கள் சந்தித்ததாகவும், பிறகு அவருடைய செல்போன் எண்ணை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண், பிரபாகரனிடம் கூறியுள்ளார். 
அரிவாளால் வெட்டப்பட்டார்
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பர்களை சந்தித்து, எனது கள்ளக்காதலியின் செல்போன் எண்ணை எப்படி கேட்கலாம் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலால் நண்பர்கள் பிரிந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரனுடன் குமாரபுரம் தோப்பூர் ஆலமூடு முருகன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேருடன் அங்கு வந்த பிரபாகரன் அவர்களை வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரோச் அஜய் ஜான்சனை சரமாரியாக வெட்டினார்.
சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு, தடுக்க வந்தவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.பின்னர் உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த ரோச் அஜய் ஜான்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
நண்பர் கைது
இதுகுறித்து லியோன் பிரபாகரன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பிரபாகரன், குமாரபுரம் தோப்பூரை சேர்ந்த கண்ணன், மருங்கூரை சேர்ந்த அமுல் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். 
இந்தநிலையில் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணன், அமுல் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்