தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 18½ லட்சத்தை கடந்தது

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 18½ லட்சத்தை கடந்தது.

Update: 2021-10-17 16:24 GMT
மதுரை, 
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 18½ லட்சத்தை கடந்தது.
தடுப்பூசி திட்டம்
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக இருந்த நிலையில், தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக கொரோனா தடுப்பூசி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயதை கடந்தவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18½ லட்சம்
அதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 18 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தென் மாவட்டங்களில் மதுரையில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன் விளைவாகவே மதுரையில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். மேலும், கடந்த 4 வாரங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தியதன் மூலம் இந்த இலக்கை விரைவாக அடைய முடிந்தது. 
கையிருப்பு
எனவே தகுதியுள்ள அனைவரும் வீட்டின் அருகே உள்ள தடுப்பூசி மையத்தில் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக 1 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மாவட்ட சுகாதார கிடங்கில் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்