வேட்டவலம் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்

Update: 2021-10-18 18:15 GMT
வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த பசுங்கரை கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் ரங்கன் (வயது 48). இவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை ஜாமீனில் எடுப்பதற்கு முயற்சி செய்த ரங்கனுக்கு கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் தேவைப்பட்டது.  

இதனையடுத்து அவர் கீரனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை (32) நேற்று மாலை சந்தித்து தனது பெயர் அடங்கிய நிலத்தின் பட்டா எண்ணை கூறி ஜாமீன் எடுப்பதற்காக சான்றிதழ் தரும்படி கேட்டுள்ளார். அதனை பரிசீலித்தபோது ரங்கன் தந்த ஆவணத்தின்படி சம்பந்தப்பட்ட நிலம் ரங்கன் உள்பட 6 பேர் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்தது. 6 பேர் பெயரில் கூட்டு பட்டாவில் இருப்பதால் உங்களுக்கு தனியாக ஜாமீன் சான்று வழங்க முடியாது என்றும் மீதமுள்ள 5 பேரும் வந்து ஒப்புதல் தந்தால் மட்டும் தான் ஜாமீன் சான்று தர முடியும் என்றும் கூறியுள்ளார்.

அப்போது தகராறில் ஈடுபட்ட ரங்கன், திடீரென கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை அவதூறாக திட்டி தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்துள்ளார். இது குறித்து வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்