ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நாதஸ்வரம், தவில் வாசித்தபடி மனு கொடுக்க வந்த இசைக்கலைஞர்கள்
நாதஸ்வரம் மற்றும் தவில் இசைத்தபடி ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இசைக்கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
ஈரோடு
நாதஸ்வரம் மற்றும் தவில் இசைத்தபடி ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இசைக்கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாதஸ்வர கலைஞர்கள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சரஸ்வதி துணை நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் கோபால் தலைமையில் செயலாளர் பிரபாகரன் மற்றும் இசை கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் இசைத்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். கடந்த 1½ ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கால் கோவில் திருவிழா, திருமணம், சீர், காதணி விழா என அனைத்து விசேஷங்களும் தடைபட்டதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே அனைத்து கலைஞர்களுக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இசை கலைஞர்களுக்கு இசை கருவிகள், இலவச பஸ் பாஸ், இலவச வீடு, வீட்டுமனை பட்டா, சங்க கட்டிடம், விருது போன்றவை வழங்க வேண்டும். மேலும் எங்களுக்கு அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு
புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்திருந்த மனுவில், ‘மாதம்பாளையம் பகுதியில் உள்ள வேதகிரிமலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீரானது அங்குள்ள ஜல்லிக்குட்டைக்கு வந்து கொண்டிருந்தது. குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதை மற்றும் குட்டையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் குட்டைக்கான நீர் வரத்து தடைபட்டது. ஆக்கிரமிப்பு காரணமாக அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலம் வரவேண்டிய தண்ணீர் திட்டமும் தடைபட்டுள்ளது. எனவே குட்டை மற்றும் குட்டைக்கு வரும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
குடிநீர் வினியோகம்
பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனது தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிக்கு ஏற்கனவே உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. பழைய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குன்னத்தூர் பகுதிக்கு வர வேண்டிய 2 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகத்தில் கடந்த 6 மாதங்களாக 10 சதவீதம் தண்ணீர் கூட முறையாக வினியோகம் செய்யப்பட வில்லை.
இதனால் சுண்டக்காம்பாளையம், செங்காளிபாளையம், சின்னகவுண்டன்வலசு, விருமாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
176 மனுக்கள்
இதேபோல் ஏராளமானோர் கோரிக்கை மனு கொடுத்தனர். மொத்தம் 176 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பவானி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி யுவராஜ் என்பவருக்கு ரூ.6 ஆயிரத்து 450 மதிப்பிலான சக்கர நாற்காலியினை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.