புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-10-19 19:00 GMT
மாடுகள் தொல்லை

மதுரை தபால் தந்தி நகர் பார்க் டவுன் பகுதியில் ஏராளமான மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிகின்றன. இதனால் அந்த சாலைகள் வழியாக மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாடுகளால் அடிக்கடி விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பார்க் டவுன். 

பஸ் வசதி 

சிவகங்கை மாவட்டம் மாத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ தேவை மற்றும் அன்றாட தேவைகளுக்காக தினமும் ஏராளமானவர்கள் மதுரைக்கு தினமும் எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். ஆனால் சரியான நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே  மாத்தூர் பகுதியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- பொதுமக்கள், மாத்தூர். 

மண் சாலை

மதுரை ஆரப்பாளையம் கோமசுபாளையம் பகுதி வார்டு எண் 14-ல் சமுதாயகூடம் பகுதிக்கு செல்லும் சாலை மண் குவியலும், கற்களும், குப்பையுமாக மாறி உள்ளது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சமுதாயக்கூடத்தில் மாலை நேர இலவச வகுப்பு நடைபெறுவதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.முத்துச்செல்வம், கோமசுபாளையம்.

பஸ் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வழிமறிச்சான் கிராமத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் அனைவரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே வழிமறிச்சான் கிராமத்தில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- பொதுமக்கள், வழிமறிச்சான்.

தெரு விளக்கு வேண்டும் 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏர்வாடி ஊராட்சி கோகுல்நகர் கிராமத்தில் ரோட்டுக்கு கிழக்கு பக்க குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
- முருகவேல், கோகுல்நகர்.

பாதாள சாக்கடை மூடி 

விருதுநகரில் சிவகாசி ஆத்துபாலம் தொடங்கி பழைய பஸ் நிலையம் செல்லும் வழி நெடுகில் பாதாள சாக்கடை மூடிகள் ரோடு மட்டத்துக்கு இல்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதேபோல தெரு விளக்குகளும் போதிய வெளிச்சத்தை தருவதில்லை. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க உரிய வசதிகளை செய்ய வேண்டும்
-அப்துல் அஜீஸ், விருதுநகர்.

செயல்படாத கழிப்பறை 
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பஸ் நிலையம் அருகில் கலெக்டர் மேம்பாட்டு நிதியில் கட்டிய கழிப்பறை செயல்பாட்டில் இல்லை. இதனால் அந்த பகுதியில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறையை கொண்டுவர வேண்டும்.
-முனியசாமி, பாம்பன்.
எரியாத மின்விளக்கு 
மதுரை மாவட்டம் பூதகுடி பஞ்சாயத்து மூகின்நகரில் உள்ள தெருக்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இதை நிர்வாகத்தில் பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதலால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-லெட்சுமணபெருமாள், மூகின்நகர்.

சேதமடைந்த சாலை 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயா குளத்திற்கும், பெரிய மாயா குளத்திற்கும் இடையே உள்ள சாலை முழுவதும் கற்கள் சிதறியும், குண்டும், குழியுமாக உள்ளது. இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.
- மஹ்சூக். கீழக்கரை.

மேலும் செய்திகள்