தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம்- புலி பல் பறிமுதல்; இரு மாநில வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

தாளவாடி அருகே தமிழகம்- கர்நாடக எல்லை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம் மற்றும் புலி பல்லை இரு மாநில வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.;

Update:2021-10-20 02:39 IST
தாளவாடி
தாளவாடி அருகே தமிழகம்- கர்நாடக எல்லை பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம் மற்றும் புலி பல்லை இரு மாநில வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர். 
இதுபற்றி வனத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசிய தகவல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இந்த நிலையில் யானை தந்தங்கள், புலி நகங்கள் போன்றவை இரு மாநில எல்லை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தாளவாடி வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும், தாளவாடி வனச்சரகர் சதீஸ் இதுபற்றி கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். 
அதிரடி சோதனை
இதைத்தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ், புளிஞ்சூர் வனச்சரகர் காந்தராஜ் மற்றும் வனபாதுகாப்பு படையினர் இரு மாநில எல்லையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது புளிஞ்சூர் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட பூதிப்படுகை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வனத்துறையினரை கண்டதும், அந்த வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓடினார். 
பறிமுதல்
பின்னர் நடந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலி பற்கள், யானையின் பற்கள், யானை தந்தங்கள், மான் கொம்புகள், வெடி மருந்துகள், சுருக்கு கண்ணிகள், சந்தன கட்டைகள், நாட்டுத் துப்பாக்கி பாகங்கள், நாட்டு வெடிகள், அரிவாள்கள், கஞ்சா இலைகள் போன்றவை இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அந்த வீடு ரங்கசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய ரங்கசாமியை இரு மாநில வனத்துறையினரும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்