தூய்மை பாரத இயக்கம் சார்பில் முழு சுகாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தலைமையில் நடந்தது

தூய்மை பாரத இயக்கம் சார்பில் முழு சுகாதார கணக்கெடுப்பு பணி கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.

Update: 2021-10-20 04:55 GMT
வாலாஜாபாத்,

நாடு முழுவதும் தேசிய அளவிலான சுகாதார கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் கிராமப்புறங்களில் முழு சுகாதார திட்ட கணக்கெடுப்பு பணி காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் தொடங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி சுகாதார கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கிராம மக்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, கிராம மக்கள் அனைவரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, சுகாதாரமான கழிப்பிடத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து கிராமப்புற தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும், குப்பையில்லா தூய்மையான கிராமமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிராமப்புற மக்களுக்கு வழங்கினார்.

தூய்மை கணக்கெடுப்பு பணிக்கான இலச்சினை வெளியிட்டு அதனை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் குமார் மற்றும் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் அன்பழகன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்