கோவை
பொள்ளாச்சி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டேவிட் ஜான் (வயது 26). டிரைவர். இவர் பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக இணையதளத்தில் தேடியுள்ளார். அதில் ஒரு கார் குறைந்த விலைக்கு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு டேவிட் ஜான் பேசி உள்ளார்.
மேலும் விற்பனை செய்யப்பட உள்ள கார் மாடல், அதன் விலை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும் அவரசம் காரணமாக காரை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். அப்போது அந்த காரை வாங்க டேவிட் ஜான் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அந்த நபர் தான் கூறும் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.99, 400 அனுப்பும் படி கூறியுள்ளார். இதையடுத்து டேவிட் ஜான் அந்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்று உள்ளார்.
ஆனால் அந்த எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் கார், மோட்டார் சைக்கிள், செல்போன், கணினி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. இந்த விளம்பரங்களை நம்பி பொருட்களை நேரில் பார்க்காமல் யாருக்கும் ஆன்லைன் மூலம் பணம் வழங்கக்கூடாது.
மேலும் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை நேரில் பார்த்து தான் பணம் வழங்க வேண்டும். இதுபோன்ற ஆன்லைன் விற்பனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்கின்றனர். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.