இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது

இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-20 19:55 GMT
மதுரை, 

இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையை சேர்ந்தவர்கள் கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த 23 பேர், கடல் வழியாக ரகசியமாக தூத்துக்குடி வந்து, பின்னர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதிக்கு வந்து தங்கினர். அவர்களுக்கான ஏற்பாடுகளை காசிவிசுவநாதன் (வயது 30) உள்ளிட்ட 4 இடைத்தரகர்கள் செய்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து, 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்தவர்களை அழைத்து வந்து மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

மேலும் ஒரு இடைத்தரகர் கைது

இந்த நிலையில் தமிழகத்தில் இதுதொடர்பாக மதுரை கப்பலூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே 3 இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இடைத்தரகரான அசோக் குமார் என்பவர் மதுரை ஒத்தக்கடை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்