போலீஸ் நிலையங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி
புகார்களை விசாரிக்க போலீஸ் நிைலயங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;
மதுரை,
புகார்களை விசாரிக்க போலீஸ் நிைலயங்களில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மனு
மதுரை கே.கே.நகரைச்சேர்ந்த சுரேஷ்குமார் ஐசக்பால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பொதுமக்களுக்கு உரிய சேவையை போலீஸ் துறையினர் முறையாக செய்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு பணிகளை இந்த துறை மூலம் நிறைவேற்றுகின்றனர். போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் எண்ணற்ற புகார்களை பெறுகின்றனர். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பல்வேறு பணிகள் நிலுவையில் இருப்பதால் போலீஸ்காரர்கள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இதனால் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைப்பதில்லை.
நாள்தோறும் அறிக்கை சமர்ப்பித்தல், பாதுகாப்பு பணி, கோர்ட்டு பணிகள், சட்டம்-ஒழுங்கை பராமரித்தல், அரசு அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், வாகன சோதனை, கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பணிகளால் போலீசார் உடல்ரீதியாக பல்வேறு துன்பங்களை சந்திக்கிறார்கள்.
தனி சிறப்பு பிரிவு
ஒரு சம்பவம் குறித்து பல்வேறு போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பதால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர இயலாத நிலை ஏற்படுகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் அங்குள்ள புகார்களை விசாரிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இதனால் புகார் அளித்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் விரைவான பதில் கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, ஒரு புகாரை விசாரிக்கும் அதிகாரி, அந்த விசாரணை முடியும் வரை அவரே முழு விசாரணையையும் நடத்த வேண்டும். மேலும் புகாரை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதை தராமல் இழுத்தடிக்கின்றனர். ஆன்லைன் புகார் சேவை நடைமுறையில் இருந்தாலும் கூட, புகார்தாரர்கள் போலீஸ் நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் புகார்களை விரைவாக விசாரிக்க ஒரு தனி சிறப்பு பிரிவு ஒன்றை அமைத்து, புகார் பெற்ற உடன் ரசீது வழங்கி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தனது மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.