9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக தாயாரின் முதல் எழுத்தை பயன்படுத்தலாமா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவு

9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக அவருடைய தாயாரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2021-10-22 19:54 GMT
மதுரை, 

9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக அவருடைய தாயாரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவியின் தாயார் மனு

கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மகள் காவ்யா. கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். எனது கணவர் எங்களை கைவிட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் 14 ஆண்டுகளாக நானும், எனது மகளும் எனது தந்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறோம்.
எனது மகளை பள்ளியில் சேர்த்த போது எனது பெயரின் முதல் எழுத்தை அவளது பெயருக்கு முன்பாக பதிவு செய்தோம். ஆதார் கார்டிலும் எனது பெயரின் முதல் எழுத்தையே எனது மகளின் பெயருக்கு முன்னால் வழங்கியுள்ளேன்.
எனது மகளும் அவரது தந்தையின் பெயரை முதலெழுத்தாக பயன்படுத்த விரும்பவில்லை. தற்போது எனது பெயரின் முதல் எழுத்தை காவியாவின் பெயருக்கு முன்பாக இனிஷியலாக பயன்படுத்த பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

உத்தரவிட வேண்டும்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போதும் இதே பிரச்சினை எழக்கூடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எனது பெயர்தான் முதல் எழுத்தாக இருக்க வேண்டும் என்பது என் மகளின் விருப்பம்.
எனவே எனது பெயரின் முதல் எழுத்தை எனது மகளின் பெயருக்கு முன்பாக பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரருக்காக இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில் வக்கீல் ராஜசெல்வன் ஆஜராகி, தாயாரின் பெயரை குழந்தை பெயருக்கு முன்பாக போடுவது தொடர்பாக ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மனுதாரர் மகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

அரசிடம் விளக்கம்

விசாரணை முடிவில், இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்