6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்

6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்;

Update:2021-10-23 18:28 IST
6363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்
கோவை

கோவை மாவட்டத்தில் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு  வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

மின் இணைப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அப்போது அவர் 12 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பையும் வழங்கினார். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இலவச மின்சார இணைப்பு கோரி 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்து காத்திருந்தனர்.

சட்ட மன்றத்தில் அறிவிப்பு


இந்த நிலையில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க உத்தரவிட்டார். இதன்படி கோவை மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதத்திற்குள் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 1,123 விவசாயிகளுக்கு ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் 83 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது. முன்பு மின்மாற்றி, மின்கம்பம் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல விவசாயிகளிடம் சிறிய தொகை கட்டணமாக பெறப்பட்டது. தற்போது அது ரத்து செய்யப்பட்டு, விவசாயிகளிடம் எந்த வித செலவினங்களுக்கும் பணம் வாங்க கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூ.203 கோடி செலவில் 13 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள்  நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தின் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும் உடனடியாக நிறைவேற்றி கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
 இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன், நா.கார்த்திக், வருவாய் அதிகாரி லீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடன்சுமை

இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்வாரியத்தின் கடன் சுமை ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக உள்ளது. ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் வட்டியாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கு காரணம் முந்தைய ஆட்சியில் 50 சதவீத மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய செலவிடப்பட்டு உள்ளது. 


புகாருக்கு முற்றுப்புள்ளி

பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு பெரியாரின் வாசகத்துடன் கூறி முற்றுப்புள்ளி வைத்து உள்ளேன். அவர் நல்ல மனிதர் என்றால் ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் தனது இருப்பை காட்டி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் இப்படி பேசுகிறார். 
இதற்காக நேரத்தை வீணடிக்க முடியாது. 

இந்த அரசு பதவி ஏற்று 5 மாதங்களில் மின் உற்பத்தியை 3 ஆயிரத்து 500 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளோம். அனல் மின்நிலையங்களில் ஒருநாள் மின் உற்பத்திக்கு 60 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.

மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. மின்வாரியத்தின் செலவினை குறைக்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்