திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.;
மதுரை,
திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்குவதற்கான 3-வது கருத்துப்பட்டறை கூட்டமும், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களைச் சார்ந்த துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட குழும இயக்குனர் அமுதவல்லி, கலெக்டர் அனிஷ் சேகர், சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தை இல்லங்கள்
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத, குழந்தை திருமணம் நடைபெறாத மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்படாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். மதுரை மாவட்டத்தில் உள்ள முதியோர்-குழந்தைகள் இல்லங்கள் அனைத்தையும் அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்து வருகிறோம். இந்த இல்லங்களை முறையாக அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும். குழந்தைகள் நலக்குழுக்கள் இருக்கின்றது. அவர்களின் மீது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் ஒரு சில புகார்கள் அமைச்சர்களுக்கு நேரடியாக வருகின்றது. அவற்றின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியில் திருமண உதவித்தொகை 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராம் தங்கமாக உயர்த்தி தருவதாக அறிவித்தார்கள். ஆனால் இந்த திட்டத்திற்கு அதிமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது திருமண உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 ஆகும்.
உதவித்தொகை
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் திருமண உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்த 20 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பெண்களுக்கு திருமண உதவித்தொகை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்தாண்டு திருமண உதவித்தொகைக்காக ரூ.862 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத்திருமணங்கள் குறித்து 1098, 1091 மற்றும் 191 என்ற எண்ணில் புகார் செய்யலாம். இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள அங்கன்வாடியை ஆய்வுசெய்த அமைச்சர்கள் கீதா ஜீவன், மூர்த்தி ஆகியோர் அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறினார்கள்.