பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை- எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது.;
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது.
ஏரி நிரம்பியது
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கிழக்கு மலை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழை நீர் பள்ளங்கள் மற்றும் காட்டாறுகள் வழியாக அந்தியூர் எண்ணமங்கலம் ஏரிக்கு வந்து சேரும். அவ்வாறு வந்து சேர்ந்த மழைநீரால் தற்போது எண்ணமங்கலம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீர் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.
தண்ணீர் செல்லும் வழியில் செலம்பூர் அம்மன் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. மழைநீரும், எண்ணமங்கலம் ஏாி உபரிநீரும் ஒரே நேரத்தில் சென்றதால் தலைப்பாலத்தில் இருந்த கற்கள் பெயர்ந்து சேதமானது.
வெள்ளம் புகுந்தது
சேதமடைந்த தரைப்பாலத்தை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, தாசில்தார் விஜயகுமார், வருவாய் அதிகாரி உமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நேற்று முன்தினமே தன் முழு கொள்ளளவான 33.48 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அந்தியூர் கெட்டிசமுத்திரம், பெரியஏரிக்கு செல்கிறது.
உபரிநீர் அதிக அளவில் வெளியேறியதால் மூலக்கடை என்ற இடத்தில் உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று காலை வெள்ளம் வடிந்தது.