அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை: சென்னம்பட்டி வனப்பகுதி தடுப்பணை இடிந்து விழுந்தது- தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசம்
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் சென்னம்பட்டி வனப்பகுதி தடுப்பணை இடிந்து விழுந்தது. இதனால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது.;
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் சென்னம்பட்டி வனப்பகுதி தடுப்பணை இடிந்து விழுந்தது. இதனால் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமானது.
பலத்த மழை
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சிங்கம்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், குருவரெட்டியூர், ஜர்த்தல், சென்னம்பட்டி, முரளி, சனி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
நள்ளிரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலை 5 மணிவரை நிற்காமல் மழை கொட்டியது.
தடுப்பணை உடைந்தது
சென்னம்பட்டி வனப்பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்தால் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி முரளி பெரிய ஏரிக்கு செல்லும். ஏரியில் உள்ள தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வந்தார்கள். .
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதி உடைந்து விழுந்தது. இதனால் தடுப்பணையில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேறி மன்னாதன்குட்டையை ஒட்டியுள்ள பச்சமுத்து தோட்டம் என்ற இடத்தில் உள்ள எலுமிச்சை, சோளம், வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்தது.
பயிர்கள் நாசம்
தண்ணீர் புகுந்ததில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த எலுமிச்சை, சோளம், வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின.
மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு சிமெண்டு கல் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த எந்திரங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியிலிருந்து முரளிக்கு செல்லும் தார் ரோட்டில் திடீரென வெள்ளம் புகுந்ததால் ஜல்லிகள் பெயர்ந்து ரோடு பழுதானது.
நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு தார்ரோடு சேதமானது.
இழப்பீடு
சென்னம்பட்டி தடுப்பணையில் தேங்கும் மழைநீர் முரளி பெரிய ஏரிக்கு வந்து விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்தது.
இந்தநிலையில் தடுப்பணை திடீரென உடைந்ததால் பல நாட்களாக தேங்கியிருந்த மழைநீர் அனைத்தும் வெளியேறி வீணானது.
இதற்கிடையே தண்ணீர் புகுந்து நாசமான பயிர்களுக்காக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், உடைந்த தடுப்பணையை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.