தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதில் அளிக்க அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2021-10-24 19:15 GMT
மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
விருதுநகர் மாவட்டம் சூளைக்கரை மேடு பகுதியில் கடந்த 1895-ம் ஆண்டு தியாகி சங்கரலிங்கனார் பிறந்தார். அவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழி கொள்கையை பின்பற்றி, இந்தியாவின் சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தார். தண்டி உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டத்தில் தியாகி சங்கரலிங்கனார் காதி வஸ்திராலயத்தை தொடங்கினார். அங்கு கதர் துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27.7.1956 அன்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வது, தேசிய அளவில் மதுபானத்துக்கு தடை விதிப்பது, தொழில்நுட்பக்கல்வி வழங்குதல், பிராந்திய மொழிகளை அதிகாரப்பூர்வ மொழியாக்குதல், தேர்தல்களில் சீர்திருத்தம் செய்தல், கதர் துணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி பல்வேறு தலைவர்கள் கேட்டும் அவர் கைவிடவில்லை. 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால், உடல் தளர்ந்தது. அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பலனின்றி இறந்தார். பின்னர் அவரது கோரிக்கையின்படி 1967-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.
அவரது நினைவாக, விருதுநகர் கல்லூரி சாலையில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அங்கு சுற்றுச்சுவர், கழிப்பறை வசதிகள் இல்லை.
அங்கு தியாகி சங்கரலிங்கனார் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள், அவரது வாழ்க்கை வரலாறு கண்காட்சி போன்றவற்றை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கவும், அங்கு சுற்றுச்சுவர் எழுப்பி, கழிப்பறை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் மாதம் 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்