மயிலந்தீபாவளி கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மயிலந்தீபாவளி கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2021-10-26 16:49 GMT
நெகமம்

வடசித்தூரில் மதஒற்றுமையை வலியுறுத்தும் மயிலந்தீபாவளி இந்த ஆண்டு கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

மயிலந்தீபாவளி 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் மயிலந்தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வடசித்தூர் பகுதியில் பெரிய அளவில் ராட்டினம், மற்றும் அங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டு இருக்கும். 

இந்த நாளில் வடசித்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள் அங்கு வந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். 

பொதுமக்கள் எதிர்பார்ப்பு 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் இந்த பண்டிகை கொண்டாடவில்லை. இதன் காரணமாக பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், இந்த ஆண்டிலாவது மயிலந்தீபாவளியை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்பில் உள்ளனர். 

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர், செல்லப்பகவுண்டன் புதூர், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தீபாவளி அன்று அசைவம் சாப்பிட மாட்டார்கள். 

அசைவ விருந்து 

இதனால் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு விருந்து வைப்பதற்காக தீபாவளிக்கு அடுத்து வரும் நாளை மயிலந்தீபாவளியாக கொண்டாடி அன்று, உறவினர்களுக்கு அசைவ உணவு செய்து விருந்து கொடுப்பது வழக்கம்.

 இவ்வாறு கொண்டாட தொடங்கிய இந்த மயிலந்தீபாவளி தற்போது 100 ஆண்டுகளை கடந்து கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இங்கு முஸ்லிம்களும் அதிகளவில் உள்ளனர். 

அவர்கள் உறவினர்கள் போன்று பழகி வருவதால் அவர்களும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். 

மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம் 

இதற்காக தீபாவளி அன்றே வடசித்தூரில் கடைகள் போட தொடங்கி விடுவார்கள். அதற்கு அடுத்த நாள் மாலை 4 மணி முதல் 7 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு குவிந்து மயிலந்தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டாடுவார்கள். 

அதுபோன்று அங்கு அமைக்கப்பட்டு உள்ள பலகாரம் மற்றும் இனிப்பு கடைகள், வளையல் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் விற்பனை அமோகமாக நடக்கும். இந்த பண்டிகைக்காக இந்த கிராமத்தை சேர்ந்த திருமணமாகி வெளியூர் சென்ற பெண்கள் கூட அன்று இங்கு குடும்பத்துடன் வந்து விடுவார்கள். 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதற்காக  வடசித்தூரில் உள்ள மைதானத்தில் 25 வகையான ராட்டினங்கள் போடப்படும். அங்கு பலர் ஆடி மகிழ்வார்கள். தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், அரசு அறிவித்து உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த பண்டிகையை கொண்டாட தயாராக இருக்கிறோம். 

எனவே இந்த ஆண்டில் வடசித்தூரில் மயிலந்தீபாவளி கொண் டாட அனுமதி அளிப்பதுடன், அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்