கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்
கரடியிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்;
மேட்டுப்பாளையம்,அக்.27-
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப் பகுதியில் உள்ள குஞ்சப்பனை பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 23) விவசாயி. இவர் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட குஞ்சப்பனை பிரிவு வனப் பகுதியை யொட்டியுள்ள செட்டில்மெண்ட் பகுதியில் தனது மனைவி சித்ரா, தனது தந்தை சந்திரன், தாய் ராஜம்மாள், மற்றும் தம்பி ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பப்பி என்கிற செல்லமாக அழைக்கும் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமராஜ் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் தாய் கரடி ஒன்று ராம் ராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் ராமராஜ் அதிர்ச்சியடைந்து தப்பியோட முயற்சி செய்தார்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கரடி அவரது தலையை தாக்க முயற்சித்தது.
அப்போது ராமராஜ் சுதாகரித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கைகளால் தடுத்து சத்தம் போட்டார். இந்த நிலையில் இதனை பார்த்துக்கொண்டிருந்த அவரது நாய் பப்பி, கண் முன்னே தனது எஜமானரை கரடி தாக்குவதை கண்டதும் ஆக்ரோஷமாக குரைத்தவாறு கரடியை விடாமல் துரத்தியது.
இதனால் தாய் கரடி தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் லேசான காயம் அடைந்த ராமராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ராமராஜ் அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் பப்பிக்கு ராமராஜ் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தட்டிக்கொடுத்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-------------------------------