மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசை காட்டி ரூ.12 லட்சம் மோசடி; கார் டிரைவர் கைது -பரபரப்பு தகவல்கள்

மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசைவார்த்தை காட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 22:02 GMT
ஈரோடு
மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசைவார்த்தை காட்டி  ரூ.12 லட்சம் மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வாடகை கார்கள் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் தேடி வருகிறார்கள். பாலாஜியின் நண்பரான ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராஜா (38) கார் டிரைவராக உள்ளார். ராஜாவின் மனைவி நித்யா (34).
இவர்களது திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. இந்த திருமணத்துக்கு ராஜா தனது நண்பரான பாலாஜியை அழைத்து இருந்தார். இதனால் பாலாஜியும் திருமணத்துக்கு சென்றிருந்தார்.
காதல்
இந்தநிலையில் பாலாஜியிடம் சென்று ராஜா, “எனது திருமணத்துக்கு வந்த சத்யா என்ற இளம்பெண் உன்னை பிடித்து இருப்பதாக கூறுகிறார். அவர் உன்னிடம் செல்போனில் பேச விரும்புவதாக தெரிவித்து உள்ளார்” என்று கூறினார். இதனால் பாலாஜிக்கும் அந்த இளம்பெண்ணிடம் பேச ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சத்யாவின் செல்போனுக்கு பாலாஜி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர்கள் நன்கு பேசி பழகிய பிறகு காதல் மலர்ந்தது.
அப்போது சத்யா புனேவில் மருத்துவ படிப்பு படித்து கொண்டிருப்பதாகவும், தனது படிப்பு செலவுக்கு பணம் கொடுக்குமாறும் பாலாஜியிடம் கூறியுள்ளார். இதனால் சத்யா கேட்கும் பணத்தை பாலாஜி அவ்வபோது அவரது வங்கி கணக்கில் செலுத்தி வந்தார். பல மாதங்களாக ஆயிரக்கணக்கில் பாலாஜியும் பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
நண்பனின் மனைவி
நேரில் சந்திக்காமல் செல்போனில் மட்டுமே பேசி கொண்டே இருந்ததால் பாலாஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் சத்யா குறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது சத்யா என்ற ஒரு இளம்பெண் கிடையாது என்றும், இத்தனை நாட்கள் அவரிடம் பேசி வந்தது தனது நண்பர் ராஜாவின் மனைவி நித்யா என்றும் தெரிய வந்தது. அதன்பிறகு அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து பாலாஜி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பாலாஜிக்கு வரன் தேடுவதை அறிந்த ராஜாவும், நித்யாவும் பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு ஏமாற்றி ரூ.12 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜா, நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் ஈரோடு கரூர் ரோட்டில் நின்றிருந்த ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்