வெளியூர்களில் திருடி கொத்தமங்கலத்தில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் தானாக முன்வந்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

வெளியூர்களில் திருடி வந்து கொத்தமங்கலத்தில் விற்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-10-27 18:04 GMT
கீரமங்கலம்:
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. கடந்த மாதம் கீரமங்கலம் சந்தைப்பேட்டை டாஸ்மாக் கடை ஊழியரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அதே சமயத்தில் மாங்காடு கிராமத்தில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது.
இப்படி கீரமங்கலம் பகுதியில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் காணவில்லை. இதுகுறித்து பலர் போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்படையை அமைத்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு நபரை சிறப்பு தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்த போது தான் வெளியூர்களில் திருடும் மோட்டார் சைக்கிள்களை கொத்தமங்கலத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கிடம் கொடுத்து விற்பனை செய்தோம் என்று கூறியுள்ளார். சிறப்பு தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து கொத்தமங்கலத்தில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 
தானாக வந்து ஒப்படைத்த இளைஞர்கள்
இந்த நிலையில் சில குறிப்பிட்ட நபர்கள் விற்ற மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது என்பது தெரிந்ததும் கொத்தமங்கலத்தை சேர்ந்த 2 பேர் நேற்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணையில் வைத்துள்ள நபர்களிடம் நாங்கள் வாங்கிய மோட்டார் சைக்கிள்கள் இவை, இதுவும் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் போல உள்ளது. அதனால் தான் ஆவணங்கள் கேட்ட போது பைனான்சில் உள்ளது மீட்டுத் தருவதாக கூறி காலங்கடத்தினார்கள். இதனால் திருட்டு மோட்டார் சைக்கிள்களை கொடுத்து பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர். 
இதே போல மேலும் கீரமங்கலம் பகுதியில் சிலரிடம் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளது என்றும் அவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்