தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

மதுரை நகரில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-10-27 20:15 GMT
மதுரை
மதுரை நகரில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் திருட்டு சம்பவங்கள்
மதுரை நகரில் சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, திருநகர் ஆகிய பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து இரவு நேரங்களில் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்க போலீஸ் துணை கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டார்.
அதன் பேரில் வடக்கு, தெற்கு போலீஸ் துணை கமிஷனர்களின் மேற்பார்வையில் தெற்குவாசல் சரக உதவி கமிஷனர், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
5 பேர் கைது
அதன்படி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த சோனிராஜா, அவரது கூட்டாளியான வாடிப்பட்டியை சேர்ந்த பெரியராமு என்ற அர்ஜூனன், தென்பரங்குன்றத்தை சேர்ந்த சுலைமான், கின்னிமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி, பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதில் சுலைமானிடம் இருந்து 8 வழக்குகளில் தொடர்புடைய 32 பவுன் நகைகள், சோனிராஜாவிடமிருந்து 5 இடங்களில் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு டி.வி. மற்றும் 6½ பவுன் நகைகளும், பெரியராமுவிடமிருந்து 7 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் திருடிய ஒரு வாகனமும், சின்னாளப்பட்டியில் கோவில் உண்டியலை திருடியதும், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய கையுறைகள், மங்கி குல்லா, பெரிய கம்பிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.24 லட்சம் பொருட்கள் மீட்பு
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 55 பவுன் நகைகள், ரூ.17,500 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனங்கள், டி.வி. என மொத்தம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
இந்த குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளன. மேலும் நகரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டு அவைகள் முக்கிய சாலைகளை கண்காணிக்கும் வகையில் இருப்பதால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. ஆகவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றச்சம்பவங்களை தடுக்க உதவிட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்