மாநில அரசின் திட்ட விவரங்களை கேட்பது வழக்கமானதுதான் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மாநில அரசின் திட்ட விவரங்களை கேட்பது வழக்கமானதுதான் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி;

Update:2021-10-28 21:34 IST
கோவை

மாநில அரசின் திட்ட விவரங்கள் குறித்து கவர்னர் கேட்பது வழக்கமானதுதான் என்று கோவையில் தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

குல தெய்வ கோவிலில் வழிபாடு

தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆந்திராவில் இருந்து  விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். 

இதில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 தொடர்ந்து கோவை திரும்பிய அவர், சிவானந்தா காலனியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் டாக்டர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் திட்ட விவரங்கள்

நாடு முழுவதும் 104 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 873 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்திய அரசு மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தமிழக கவர்னர், அரசிடம் திட்டங்கள் குறித்த அறிக்கை கேட்டது சர்ச்சையாகி இருக்கிறது. தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது. நான் தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆகிய இரு அரசுகளிடம் இருந்தும் திட்ட விவரங்களை கேட்டு உள்ளேன். 

வருகிற 11-ந் தேதி டெல்லியில் கவர்னர்கள் மாநாடு நடைபெற உள்ளது. எனவே எந்தெந்த மாநிலங்களில், என்னென்ன திட்டங்கள் நடைபெறுகிறது என்பது குறித்த தகவலை பெற்று கொடுக்க மத்திய அரசு சொல்லி இருக்கிறது. இது வழக்கமான ஒன்றுதான்.

தெலுங்கானா, புதுச்சேரி ஒத்துழைப்பு

கவர்னர்கள் மாநிலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தகவல்களை சேகரித்து கலந்துரையாட இருக்கின்றோம். தெலுங்கானா, புதுச்சேரி அரசுள் முழு ஒத்துழைப்புடன் தகவல்களை அளித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்