பள்ளிக்கூடங்கள் திறப்பை முன்னிட்டு வகுப்பறைகளில் தூய்மைப்பணிகள் தீவிரம்; மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்
பள்ளிக்கூடங்கள் திறப்பை முன்னிட்டு வகுப்பறைகளில் தூய்மைப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.;
ஈரோடு
பள்ளிக்கூடங்கள் திறப்பை முன்னிட்டு வகுப்பறைகளில் தூய்மைப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
பள்ளிக்கூடம் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையும் பள்ளிக்கூடங்கள் திறப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கூட திறப்புக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கிருமி நாசினி தெளிப்பு
நேற்று ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறைகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இதுபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கற்பித்தலுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரிய- ஆசிரியைகளுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
பெற்றோர் விருப்பம்
அதுமட்டுமின்றி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்களில் இருந்து ஒரு படிவம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பள்ளிக்கூடங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவது தொடர்பான விருப்பத்தை தெரிவிக்கவும், கொரோனா சூழலில் ஏற்படும் பிரச்சினைகள் பெற்றோர்கள் தெரிந்து கொண்டு மாணவ- மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதில் விருப்பம் இருப்பதை உறுதி செய்யும் படியும் கூறப்பட்டு உள்ளது.
இது பெற்றோர்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு கல்வித்துறை அல்லது நிர்வாகம் பொறுப்பு ஏற்காது என்ற அளவில் பெற்றோரின் ஒப்புதல் பெறும் வகையில் இந்த படிவங்கள் உள்ளன.
இருப்பினும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதில் ஆர்வமாக உள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இது போதுமான கல்வியாக இருக்கவில்லை.
எனவே பள்ளிக்கூட திறப்பை பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
பணிகள் தீவிரம்
இதற்கிடையே மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்து இருப்பதாக வரும் செய்திகளின் அடிப்படையில் பள்ளிக்கூட திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.
ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கூட திறப்புக்கு பள்ளிக்கூடங்களை தயார் நிலையில் வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளனர். இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள பள்ளிக்கூடங்களில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருந்த வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. சில நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.