மஞ்சள் பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை; வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை

மஞ்சள் பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2021-10-30 02:49 IST
ஈரோடு
மஞ்சள் பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டு குடிநீர் திட்டம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக வேளாண் குறைதீர் நாள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கி உள்ளதால் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார்.
காலை 10 மணி முதல் பகல் 11.30 மணி வரை விவசாயிகள் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் முறையை எளிமையாக்க வேண்டும். மேலும் விவசாய இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை நிலங்களுக்கு கண்டிப்பாக வரி வசூல் செய்யப்பட வேண்டும். பவானிசாகர் அணை முதல் பவானி வரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு 20 கன அடி தண்ணீர் திறந்தால் போதும். ஆனால் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அனுமதியற்ற பாசனம், தொழிற்சாலைகள், சூளைகள் போன்றவைகளுக்கு சட்ட விரோதமாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல உதவுகிறது. இதை மாற்றி அணையில் இருந்து குழாய் மூலம் 20 கன அடியாக வழங்கினால் தண்ணீர் திருட்டு தடுக்கப்படும். ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது நீரேற்று பாசனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
இலை கருகல் நோய்
மழை காலம் தொடங்கி உள்ளதால் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள மண் ரோடுகள் அடித்துச்செல்லப்பட்டது. இதன் காரணமாக மலை பகுதியில் இருந்து காய்கறிகளை கீழே கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சேதம் அடைந்த பாதைகளை சரிசெய்து கொடுக்க வேண்டும். உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டருக்குள் பிற காய்கறி கடைகளை அனுமதிக்கக்கூடாது.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிரில் இலை கருகல் நோய் அதிகம் உள்ளது. இதன் காரணமாக 75 சதவீத மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இலை கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்குவாரி
கோபி பகுதியில் உள்ள 36 நெல் கொள்முதல் நிலையங்களும், அரசின் நேரடி இடத்தில் பாதுகாப்பாக அமைக்க வேண்டும். பெருந்துறை எக்கட்டாம்பாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி ஆகிய பகுதியில் கல் குவாரிகள், கிரஷர்கள் அரசின் விதிகளுக்கு மாறாக செயல்படுகிறது. அவற்றுக்கான அனுமதி காலம் முடிந்தும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சுற்றுச்சூழல், நீர், நிலம், காற்று மாசுபடுகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் பாதிப்படைகிறது. இதுகுறித்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாக உத்தரவின்படி கல்குவாரி மற்றும் கிரஷர் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அங்கு சட்ட விரோதமாக செயல்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
பயிர் கடன்
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன், வேளாண் கடன் வழங்காமல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற செய்வதால், கடன் பெறுவோர் நகரத்துக்கு அலைந்து, ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே பெற முடிகிறது. ரூ.3 லட்சம் கடன் பெறும் விவசாயி 6 முறை வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலேயே வேளாண் கடன் பெற வழிவகை செய்ய வேண்டும்.
ஆப்பக்கூடல் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த ஜூன் 16-ந்தேதிக்கு பின்னர் வழங்கிய கரும்புக்கான தொகை ரூ.42 கோடிக்கு மேல் வழங்கவில்லை. அவர்கள் பரிந்துரைப்படி வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான தொகையை, கரும்பு தொகையில் பிடித்தம் செய்து, அந்த தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்வதால் விவசாயிகள் புதிய கடன் பெற முடியவில்லை. நிலுவைத் தொகையை வழங்காமல் வரும் பருவத்துக்கு கரும்பு வெட்ட ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது.
மானிய விலையில் டீசல்
அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சோலாரில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை அருகில் உள்ள 46 புதூர் பஸ் நிலையத்துக்கு மாற்ற வேண்டும். மொடக்குறிச்சியில் இருந்து ஈரோடு வரை உள்ள ரோட்டை அகலப்படுத்த வேண்டும். டீசல் விலை உயர்வாலும், ஆட்கள் பற்றாக்குறையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க அரசுக்கு பரிந்துறை செய்ய வேண்டும்.
அனைத்து பகுதியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் சிறப்பு முகாம் நாட்களை தவிர காலை 10 மணி முதல் பகல் 11 மணி வரை அவர்களுக்குரிய அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு தட்கல் முறையில் உடனடி மின் இணைப்புபெற கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.
இயற்கை விவசாயம்
இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கூறியதாவது:-
வங்கிகளில் விவசாயிகள் பயிர் கடன் பெறும்போது அடங்கல் நகல் கேட்கின்றனர். ஜமாபந்தி முடிந்த ஆண்டுக்கான அடங்கல் விவரத்தை மட்டுமே கிராம நிர்வாக அலுவலர்கள் தர முடியும். இருப்பினும் விவசாயிகள் நலன் கருதி அடங்கலில் கடந்தாண்டு பயிர் செய்த விவரம், நடப்பு பருவத்தில் அந்த நிலத்தில் நடவு செய்துள்ள பயிர் விவரத்தை தனியாக குறித்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்று கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்வோர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும்போது செயற்கை உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது. அந்த விவசாயி, இயற்கை விவசாயம் செய்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேளாண்துறை சான்று பெற்று வழங்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து அரசுக்கு தெரிவித்ததால், சர்க்கரை ஆணையர் தனியாக இந்த ஆலைக்காக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் இந்த ஆலை ரூ.41 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளதால், விவசாயிகளுக்கு கரும்பு வெட்டியதற்கும், லாரியில் ஏற்றி சென்றமைக்கும், கரும்பு ஏற்றி, இறக்கிய கூலி போன்றவைகளை அரசு சார்பில் ஆலைக்கு வழங்காமல், அந்த பகுதி தாசில்தார் மூலம் தொடங்கப்படும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தாசில்தார் மூலம் விவசாயிகள் வங்கி கணக்குக்கு உரிய தொகை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்