கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை;
கோவை
கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தோழியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
கோவை சாய்பாபாகாலனி சர்ச் வீதியை சேர்ந்தவர் அஸ்வதி (வயது 20). பி.காம் பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருடைய தந்தை இறந்துபோனார். எனவே அவர் தனது தாயுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கோவை-தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அங்கு பணியாற்றிய திருமணமான பெண்ணுடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தோழியானார்கள்.
கள்ளக்காதல்
தோழியின் வீடு இடையர்பாளையத்தில் உளளது. இதனால் அவர் தனது தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் அவரின் கணவர் ஜெகனுடன் (29) அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த வழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அஸ்வதியும், ஜெகனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த விவகாரம் தெரியவந்ததும், ஜெகனின் மனைவி கணவருடன் தகராறு செய்தார். இதனால் குடும்ப பிரச்சினை பெரிதாகி, கணவருடன் பேசுவதை நிறுத்தினார். அத்துடன் அவர் தனது தோழி கண்டித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஜெகன், அஸ்வதியுடன் தொடர்ந்து பழகி வந்து உள்ளார்.
கடும் வாக்குவாதம்
இந்த நிலையில் அஸ்வதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த, ஜெகன் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அஸ்வதி தன்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக்கொள்ளு மாறு ஜெகனுடன் கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே மனைவி தன்னைவிட்டு பிரியபோவதாக கூறியதாலும், கள்ளக்காதலியும் வரவேண்டாம் என்று கூறியதாலும் அஸ்வதி மீது ஜெகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கழுத்தை இறுக்கி கொலை
அப்போது அஸ்வதி கத்தி கூச்சல் போட முயன்று உள்ளார். உடனே சுடிதார் துப்பட்டாவை எடுத்து அஸ்வதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நைசாக அந்த வீட்டில் இருந்து ஜெகன் தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் அஸ்வதியின் அக்காள், அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுத்து பேச வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அஸ்வதி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்காதலன் கைது
உடனே அவர் இது குறித்து சாய்பாபாகாலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஜெகன்தான் அஸ்வதியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து தலைமறை வான அவரை போலீசார் தேடி வந்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
கைதான ஜெகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மனைவியின் தோழியுடன் நான் தொடர்பு வைத்திருந்ததால் அவர் என்னை விட்டு செல்வதாக கூறினார். அதுபோன்று எனது கள்ளக்காதலியும் என்னைவிட்டு செல்வதாக கூறினார். அந்த ஆத்திரத்தில் நான் அவரை கொலை செய்தேன் என்றார்.
கோவையில் கள்ளக்காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.