கோவையில் தீபாவளி மதுவிருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி

கோவையில் தீபாவளி மதுவிருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி;

Update:2021-11-05 22:32 IST
கோவை

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த மதுவிருந்தில் அடுத்தடுத்து 3 பேர் பலியானார்கள். போதைக்காக மதுவுடன் தின்னர் கலந்து குடித்ததால் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெயிண்டர்கள்

கோவை பாப்பநாயக்கன்பாளையம்  பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (57), சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில்  நண்பர்களான இவர்கள் 3 பேரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுவிருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபான பாட்டில்களை வாங்கினர். 

பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய, விடிய மதுகுடித்ததாக தெரிகிறது. 

3 பேர் பலி

பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்திபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்து அவர்களது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.அவர்கள்  கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

பிரேத பரிசோதனை

ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

தின்னர் கலந்து குடித்தனர்

பிரேத பரிசோதனையில், 3 பேரும் அதிக போதைக்காக விஸ்கியில், பெயிண்டுக்கு கலக்கும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் தொண்டையில் இருந்து வயிறு வரை அரிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்