பொள்ளாச்சியில் குளம் தடுப்பணைகள் நிரம்பின

பொள்ளாச்சியில் குளம் தடுப்பணைகள் நிரம்பின;

Update:2021-11-06 20:10 IST
பொள்ளாச்சி

தொடர் மழையின் காரணமாக பொள்ளாச்சியில் குளம், தடுப்பணைகள், குட்டைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குளங்கள் நிரம்பின

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக பி.ஏ.பி. திட்ட அணைகளான சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு மற்றும் தொகுப்பு அணைகளும் நிரம்பின. இதையடுத்து ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொள்ளாச்சியில் பகுதியில் தீவிரமடைந்து உள்ளது.

இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் குளம், குட்டைகள், தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் தேவம்பாடிவலசு குளம் தொடர் மழையால் நேற்று நிரம்பியது. மழைக்கு முன்பாக குளத்திற்கு வரும் நீர்வழித்தடங்களை விவசாயிகள் தூர்வாரியதால் மழைநீர் வீணாகாமல் குளத்திற்கு வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது அணைகளில் இருந்து உபரிநீர் வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே உபரிநீரை கோதவாடி குளத்திற்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நிலத்தடி நீர்மட்டம்

ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் குளம், குட்டைகள், தடுப்பணைகளுக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக குப்புச்சிபுதூர் குளம், குளப்பத்துக்குளம் மற்றும் ஏராளமான தடுப்பணைகள், குட்டைகள் நிரம்பி உள்ளன. மேலும் தொடர் மழையின் காரணமாக எலவக்கரை குளமும் நிரம்பி விட்டது. மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. இதனால் பெரும்பாலான பாசன கிணறுகளும் நிரம்பி உள்ளன.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து உள்ளது. எனவே கோடை காலம் வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் பாசன விவசாயிகள் அனுமதியுடன் செல்லப்பகவுண்டன்புதூர், மன்றாம்பாளையத்தில் உள்ள குட்டைகளுக்கு பி.ஏ.பி. தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குட்டைகள் நிரம்பி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்