காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்பு
பேரையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.;
பேரையூர்,
பேரையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தொடர் மழை
மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சாப்டூர், அணைக்கரைப்பட்டி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாப்டூர் கேணி மற்றும் சுற்றியுள்ள ஓடைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விருதுநகரை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 20). பி.காம் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து சாப்டூர் கேணி பகுதிக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள கேணி அருவியில் குளித்த போது முகமது முஸ்தபா திடீரென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதேபோல் வி.ராமசாமிபுரத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜசேகர் (30), அங்குள்ள நொண்டியாற்று ஓடையை கடந்தபோது, அவரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
உடல்கள் மீட்பு
முகமது முஸ்தபா, ராஜசேகர் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள், சாப்டூர் போலீசார் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், முகமது முஸ்தபா கேணி அருவிப் பகுதியில் மூங்கில் புதர் அருகே நேற்று பிணமாக மீட்கப்பட்டார். ராஜசேகரின் உடல் ஓடையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கண்மாயில் மீட்கப்பட்டது. 2 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடு இடிந்தது
தொடர் மழையால் பேரையூர் தாலுகாவில் உள்ள ஜாரி உசிலம்பட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மள்ளபுரத்தை சேர்ந்த கண்ணகி என்பவரது வீட்டின் முன் பகுதி மழையால் இடிந்து விழுந்தது.
சாப்டூர் வனப்பகுதி தற்போது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு, பொதுமக்கள் செல்ல தடை உள்ளது. ஆனால் அதையும் மீறி, கடந்த 4 ஆண்டுகளில் கேணி அருவிக்கு குளிப்பதற்காக சென்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால் சாப்டூர் வனத்துறையினர் இப்பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.