பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள வனச்சரக அலுவலகம் அருகே பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் ஜெ.லட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வனப்பகுதியை தனியாருக்கு கொடுக்கக்கூடாது. 1980-ம் ஆண்டு வனச்சட்டத்தை கைவிட வேண்டும். 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்யக்கூடாது ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் சுடர் நடராஜ், எம்.சுரேந்தர், தொழிலாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.முருகன், எம்.சரவணகுமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் வனச்சரக அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் அப்புசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 2006 வன உரிமை சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை பறிக்கக்கூடாது. வனப்பகுதியில் உள்ளவர்கள் வன பொருட்களை சேகரிக்வும், கால்நடைகளை மேய்க்கவும், வன தெய்வங்களை வழிபடவும் அரசு தடையாக இருக்கக்கூடாது ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அந்தியூர் வட்டார துணைத்தலைவர் தேவராஜன், கட்டுமான சங்க பொறுப்பாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூரில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் வனத்துறை அலுவலகம் அருகே சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வனத்துறையினரிடம் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
பங்களாப்புதூரில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சங்க தலைவர் கார்த்திவேல் உள்பட நிர்வாகிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
தாளவாடி
தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி ஆகிய வனச்சரக அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.