கோவையின் புதிய மாஸ்டர் பிளான் பிப்ரவரி மாதம் வெளியீடு

கோவையின் புதிய மாஸ்டர் பிளான் பிப்ரவரி மாதம் வெளியீடு;

Update:2021-11-09 19:41 IST
கோவை

கூடுதலாக 255 சதுர கிலோமீட்டர் சேர்க்கப்பட்டு புதிய மாஸ்டர் பிளான் பிப்ரவரி மாதம் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் கோவையில் தொழில்கள் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

புதிய மாஸ்டர் பிளான்


கோவை நகரம், புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளன. எனவே இங்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அவசியமாகிறது. 

கடந்த 1994-ம் ஆண்டு 1,276 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு 2007-ம் ஆண்டு திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் அரசு ஏற்கவில்லை.

இதைத்தொடர்ந்து புதிய மாஸ்டர் பிளான் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை மாவட்ட டவுன் மற்றும் கன்ட்ரி பிளானிங் பிரிவு செய்து வருகிறது. 

இது தொடர்பாக தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலெக்டர் சமீரன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிய மாஸ்டர் பிளான் குறித்து கன்ட்ரி பிளானிங் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது

முதலில் 1,276 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 255 சதுரகிலோ மீட்டர் பரப் பளவு சேர்க்கப்பட்டு 1,531 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுக்கு மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

இதில் கிட்டாம்பாளையம், செம்மாண்டம்பாளையம், போகம்பட்டி, செலக்கரிச்சல், வடவள்ளி, கரிகவுண்டம்பாளையம், பச்சாபாளையம், நாராயணபுரம், மசகவுண்டம்பாளையம், செட்டிபாளையம், கரியாம் பாளையம், சிக்காரம்பாளையம், 

இடையர்பாளையம், அரசம்பாளை யம், பனப்பட்டி, சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாளம் பாளையம், பொட்டையாண்டிபொரம்பு ஆகிய 18 ஊராட்சிகள் இடம் பெறுகிறது.

மோப்பேரிபாளையம், காரமடை ஆகிய 2 டவுன் பஞ்சாயத்து பகுதிக ளும் இடம் பெறுகிறது. மேலும் குறிச்சி, மலுமிச்சம்பட்டி சீரபாளையம் பகுதிகளும் இணைக்கப்பபடுகிறது. 

அறிவியல் முறையில் (ஜி.பி.எஸ்.) எல்லைப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

சரக்கு முனையம்

எல்.அண்டு டி பைபாஸ் சாலை, வெள்ளலூர் அல்லது செட்டிப்பாளையம் பகுதியில் பெரியஅளவிலான சரக்கு வாகன முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 

புதிய மாஸ்டர் பிளான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது. புதிய மாஸ்டர் பிளான் மூலம், 

கோவை மாவட்டத்தில் கட்டமைப்பு வசதிகள், புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், வட்ட சாலைகள், புதிய தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு உள்ளது. 

இதன் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 

 இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்