உத்திரமேரூர் அருகே ஓடையில் குளிக்க சென்ற சிறுவன் பிணமாக மீட்பு
உத்திரமேரூர் அருகே ஓடையில் குளிக்க சென்ற சிறுவன் 10 மணி நேர தேடலுக்கு பின்னர் பிணமாக மீட்கப்பட்டான்.;
உத்திரமேரூர்,
சென்னை அடையார் ராமசாமி கார்டனை சேர்ந்தவர் வனிதா. இவர் தனது தாயாரின் காரியத்திற்காக உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து இருந்தார். நேற்று முன்தினம் இவரது மகன் சந்தோஷ் அங்கு உள்ள ஓடையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று இருந்தார்.
அப்போது அவரை வெள்ளம் அடித்துச் சென்றதில் மாயமானார். இதுபற்றி உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் பணி துறை மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின்பேரில் மாவட்ட அலுவலர் சக்திவேல் மற்றும் உத்தரமேரூர் நிலைய அலுவலர் ஏழுமலை உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தில் மாயமான அவரின் உடலை சுமார் 6 மணிநேரம் தேடினர்.
இரவு நேரமானதால் மீட்பு பணியை நிறுத்திவிட்டனர். நேற்று காலை 6 மணியளவில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களும் தீயணைப்புத் துறையினரும் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
காலை 10 மணி அளவில் வெள்ளத்தில் மூழ்கி பலியான சிறுவன் சந்தோஷின் உடலை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். சுமார் 10 மணி நேரத்தேடலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்தவரின் உடலை கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.